87 ரன்னுக்கு சுருண்டது இந்தியா * ‘ஜூனியர்’ உலக கோப்பையில் ஏமாற்றம் | ஜனவரி 21, 2023

தினமலர்  தினமலர்
87 ரன்னுக்கு சுருண்டது இந்தியா * ‘ஜூனியர்’ உலக கோப்பையில் ஏமாற்றம் | ஜனவரி 21, 2023

போர்ட்செப்ஸ்ட்ரூம்: ‘ஜூனியர்’ உலக கோப்பை தொடரின் ‘சூப்பர்–6’ போட்டியில் இந்திய பெண்கள் அணி, 87 ரன்னுக்கு சுருண்டு தோற்றது.

தென் ஆப்ரிக்காவில், 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஐ.சி.சி., ‘டி–20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சீசன் நடக்கிறது. லீக் சுற்று முடிந்து நேற்று ‘சூப்பர்–6’ சுற்று போட்டிகள் துவங்கின. இதில் இந்திய அணி ‘குரூப் 1’ ல் இடம் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, வங்கதேசம், தென் ஆப்ரிக்க அணிகளும் இதில் உள்ளன.

நேற்று தனது முதல் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை சந்தித்தது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலியா பீல்டிங் தேர்வு செய்தது.

இந்திய அணிக்கு கேப்டன் ஷபாலி வர்மா, ஸ்வேதா ஜோடி துவக்கம் கொடுத்தது. அனுபவ ஷபாலி 8 ரன்னுக்கு அவுட்டாகி ஏமாற்ற, திரிஷா 4,  சோனியா 2 ரன்னுக்கு அவுட்டாகினர். அணியை மீட்க வேண்டிய கட்டாயத்தில் இறங்கிய விக்கெட் கீப்பர் ரிச்சாவும் 7 ரன்னில் திரும்பினார்.

லீக் சுற்றில் அவுட்டாகாத ஸ்வேதா (29 பந்தில் 21 ரன்), நேற்று முதன் முறையாக அவுட்டானார். இந்தியா 54/5 ரன் என திணறியது. தொடர்ந்து பார்ஷவி (8), ஹிரிஷிதா (14), திதாஸ் (14) விரைவில் வெளியேறினர். இந்திய அணி 18.5 ஓவரில் 87 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 13.5 ஓவரில் 88/3 ரன் எடுத்து 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது.

மூலக்கதை